அண்மையில் டெல்லி சென்றிருந்த பாஜக எம்.பி.யும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபி, பிரதமர் மோடியைச் சந்தித்து கொய்யா மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்தார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளதாவது:
கேரளாவில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயலட்சுமி என்ற மாணவி வழங்கிய கொய்யா மரக்கன்று பரிசை டெல்லி சென்று பிரதமரிடம் ஒப்படைத்தேன். கேரளாவின் பத்தனம்திட்டாவில் குளநாடா கிராமத்தை சேர்ந்த அறிவாற்றல் மிக்க இளம் மாணவி ஜெயலட்சுமி வளர்த்த மரக்கன்று, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடப்படவுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மரக்கன்று நடப்படும் என மோடி அப்போது என்னிடம் உறுதி அளித்தார். இவ்வாறு அதில் நடிகர் சுரேஷ் கோபி கூறியுள்ளார். மாணவி ஜெயலட்சுமி, சிறந்த மாணவிக்கு அளிக்கப்படும் ‘கர்ஷக திலகம்’ என்ற கேரள மாநில அரசின் விருதை பெற்றவர் ஆவார்.
கொய்யா மரக்கன்றை பிரதமர் மோடியிடம் வழங்குவது போன்ற புகைப்படத்தை நடிகர் சுரேஷ் கோபி, தனது பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். – பிடிஐ