குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8ல் எண்ணப்படு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தலை வைத்து ஆன்லைன் சூதாட்டம் களைகட்டியுள்ளதாகவும், இதன் மூலம் கள்ளச்சந்தையில் ரூ.50 ஆயிரம் கோடி வரை பணப்புழகத்தை ஏற்படுத்த தரகர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
படேல் மந்திரம்.. கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 127 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றியைப் பதிவு செய்தது. இந்த சட்டபேரவைத் தேர்தலிலும் பாஜக 120 இடங்களைக் கைப்பற்றி மெகா வெற்றி பெறும் என்று புக்கீஸ் கணிக்கின்றனர். அதனாலேயே இந்தத் தேர்தலை ஒட்டி ஆன்லைன் சூதாட்ட சந்தை களைகட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2002 வெற்றி 2022ல் மீண்டும் பிரதிபலிக்க வாய்ப்புள்ள காரணத்தையும் புக்கீஸ் தரப்பே விவரிக்கின்றது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் (2017 தேர்தல்) குஜராத்தின் படேல் சமூகத்தினர் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஹர்திக் படேல் முன்னெடுத்த ஓபிசி வகுப்பினருக்கான போராட்டம் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. குஜராத் தேர்தல் வெற்றியை கணிப்பதில் ஓபிசி வகுப்பினர் குறிப்பாக படேல் வகுப்பினரின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில் 2017 தேர்தலில் அவர்களின் அதிருப்தி எதிரொலித்தது. அதன் காரணமாகவே 99 இடங்கள் என்ற நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. அதன்பின்னர் காங்கிரஸில் இருந்து கட்சித் தாவல்கள் ஏற்பட்டதால் பாஜகவின் பலம் அதிகரித்தது.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு படேல் சமூகத்தினர், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் அதிருப்தி இல்லை. அதனால் 2022 வெற்றியை 2022ல் மீண்டும் பாஜக பதிவு செய்யும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது படேல் சமூகப் போராட்டத்தின் முகமான ஹர்திக் படேல் பாஜகவில் இணைந்துள்ளார். அவர் இந்த தேர்தலில் பாஜக சார்பில் விரம்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். படேல் சமூகத்தினர் குஜராத் மக்கள் தொகையில் 12 முதல் 14 சதவீதம் பேர் உள்ளனர். அதனால் பாஜகவுக்கு க்ளீன் மெஜாரிட்டி நிச்சயம் என்று புக்கீஸ் தரப்பில் சூதாட்டத்தை ஊக்குவிக்க அரசியல் கணக்குகள் சொல்லப்படுகிறது.
அண்மையில் குஜராத் மாநிலம் வல்சடில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று எனக்கு புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலில் பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும் என்பதைக் கூறவே நான் இங்கு வந்துள்ளேன். இது நான் உருவாக்கிய குஜராத்” என்று முழங்கியது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை அகமது படேலின் மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. காந்தி குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்ற அவர் மறைவால் கட்சியினரை ஒருங்கிணைக்க முடியாமல் பாஜக திணறி வருவதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 77 தொகுதிகளைக் கைப்பற்றிய நிலையில் இந்தத் தேர்தலில் வெறும் 15 முதல் 30 தொகுதிகளுக்கு சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 20 இடங்களைப் பெறலாம். காங்கிரஸ் கட்சிக்கு குஜராத்தில் வலுவான தலைமை இல்லாததால் காங்கிரஸின் வாக்குகள் குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் பிரிந்து அது ஆம் ஆத்மிக்கு பதிவாகலாம் என்று கூறப்படுகிறது.
நாளை (நவம்பர் 12) சட்டப்பேரவைத் தேர்தலைக் காணும் இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்று சூதாட்ட தரகர்கள். அங்குள்ள அரசுக்கான எதிர்ப்பலைகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு இல்லை என்று கூறுகின்றனர்.
ஆடாமல் ஜெயிக்கும் ஆன்லைன் சூதாட்ட தரகர்கள்.. சூதாட்ட தரகர்களின் தேர்தல் கணிப்புகள் எல்லாம் தேர்தல் நிபுணர்கள், அரசியல் வல்லுநர்கள், தேர்தல் உத்தி வகுப்பாளர்களையே விஞ்சி நிற்கிறது. ஜனநாயகத் திருவிழாவை வைத்து நடத்தப்படும் இந்த சூதாட்டம் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்துடன் பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை சூதாட்டமும் களை கட்டியுள்ளது. ஆனால் இந்த சூதாட்டங்கள் எல்லாம் ஆன்லைனில் நடைபெறுவதால் இவற்றை முழுமையாக உடனடியாக வேரறுப்பது மிகவும் கடினம் என காவல்துறை தரப்பு தெரிவிக்கின்றது.