வடகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் கடலையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. வரை வீசியது
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை ஒடிஸா- ஆந்திரா இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. பின்னர் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
நேற்றைய தினம் வங்கக் கடலின் வடகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் மற்றும் அந்தமான் கடலையொட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. வரை வீசியது. இதையடுத்து இன்றைய தினம் ஒடிஸா கடலோரம், மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திராவின் கடலோரங்களில் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசும்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். அவ்வாறு மாறும் புயல் நாளை மாலை அதாவது அடுத்த 48 மணி நேரத்தில் கரையை கடக்கும். இந்த புயல் ஒடிஸா- ஆந்திரா இடையே கலிங்கபட்டினத்தை சுற்றியுள்ள விசாகப்பட்டினம்- கோபால்பூர் பகுதியில் கரையை கடக்கிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 75 கி.மீ. வேகத்திற்கு மேல் காற்று வீசும்.
வங்கக் கடல், அந்தமான் கடலின் மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.