தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் இன்று (அக். 20) வெளியிட்ட அறிவிப்பு:

“தென் தமிழகத்தில் (1 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் சோழவந்தான், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், தருமபுரி பென்னாகரம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ., குறைந்தபட்சமாக, மதுரை மாவட்டம் பேரையூர், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை, கடலூர், சென்னை விமான நிலையம், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கடலூர் மாவட்டம் விருதாச்சலம், தேனி மாவட்டம் வீரபாண்டி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

குறிப்பு: வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.