நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிள்ள அப்பர்பவானி, காட்டு குப்பை, பார்சன்ஸ்வேலி, மரவ கண்டி, பைக்காரா உட்பட்ட பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், குந்தா மற்றும் பைக்காரா மின் வட்டத்திற்கு உட்பட்ட அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பைக்காரா, பார்சன்ஸ்வேலி, மாயார் ஆகிய அணைகளுக்கு, இன்று காலை, 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 250 கன அடி முதல், 300 கன அடி வரை அணைக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது.

அணைகள் திறப்பு

குந்தா, பைக்காரா ஆகிய மின் வட்டத்தின் கீழ், 12 மின் நிலையம், 13 அணைகள் உள்ளன. இன்று காலை, 6 மணி நிலவரப்படி, அணைகளுக்கு, வினாடிக்கு, 300 கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைகளில் நீர்மட்டம் நிலவரம்

மேல்பவானி – 185 (210), போர்த்திமந்து – 115 (130), அவலாஞ்சி – 110 (171), எமரால்டு – 105.5 (184), முக்கூர்த்தி – 16.5 (18), பைக்காரா – 70 (100), சாண்டிநல்லா – 40 (49), கிளன்மார்கன் – 30.5 (33), மாயாறு – 16.5 (17), பார்சன்ஸ்வேலி – 65 (77), குந்தா – 85.5 (89), கெத்தை – 155.5 (156), பில்லூர் – 100 (100) ஆகிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குந்தா, கெத்தை, கோவை மாவட்டம் பில்லூர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேற்கண்ட மூன்று அணைகளின் பாதுகாப்பு கருதி எந்நேரத்திலும் அணைகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட இருப்பதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்த காரணத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என, நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.