100 கோடி கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி, பிரதமர் நரேந்திர மோடித் தலைமையின் கீழ் இந்தியா படைத்த சாதனை வரலாற்று சிறப்புமிக்க பெருமையான தருணம் இது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18 வயதைக் கடந்த அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு செலுத்தி வருகிறது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 94 கோடியாக உள்ளது. எனவே அவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்த முடிவு செய்யப்பட்டு தடுப்பூசிக் கொள்கையில் கடந்த ஜூன் மாதம் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
மாநில அரசுகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.21) காலையில் 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டியுள்ளது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடித் தலைமையின் கீழ், 100 கோடி மக்களுக்குமேல் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்காக, நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமையானத் தருணம் என அவர் விவரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அமித்ஷா கூறியுள்ளதாவது:
‘‘வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் பெருமையானத் தருணம்! நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை மற்றும் தொடர்ச்சியான ஊக்குவிப்பு மூலம் இந்தியா இன்று, 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்குக் கோவிட்-19 தடுப்பூசிச் செலுத்திச் சாதனைப் படைத்துள்ளது. இது புதிய இந்தியாவின் மிகப் பெரிய திறனை, ஒட்டுமொத்த உலகத்துக்கும் மீண்டும் தெரிவித்துள்ளது.
இந்த முக்கியச் சாதனையை அடைந்ததில், அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்புக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனைக்காக நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் மற்றும் பல சவால்களைச் சமாளித்து இந்த உயர்ந்த பணியில் தங்கள் பங்களிப்பை அளித்த அனைத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன்.’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.