சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டும் இரவு நேர போக்குவரத்தை அனுமதிப்பதற்கான பரிந்துரைகளில் தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் நெடுஞ்சாலைதுறை முதன்மை தலைமை வனபாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், அதில் சில விஷயங்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் 6 சக்கரங்களுக்கு மேல் கொண்ட வாகனங்கள் செல்ல மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை தடை விதிக்கலாம் என்றும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ அவசர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர, பிற வாகனங்களை இயக்க தடை விதிக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்களை எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கலாம் என்றும், அழுகும் பொருட்களான காய்கறிகள், பூக்கள் மற்றும் பால் போன்றவற்றை இரவு நேரங்களில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.