பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன்படி சென்னையில் இன்று (மார்ச் 30) பெட்ரோலின் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.106.69க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.96.76க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒன்பது நாள்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5.29 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.5.33 ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதிலிருந்து 9 நாட்களில் 8வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.