இயற்கையாகவே அனைவரையும் வசீகரிக்கும் திறன் படைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அவர் திரையுலகில் கொடிகட்டி பறந்ததற்குக் காரணம் அவருக்குள்ள தனித்தன்மைதான் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்று மறைந்த திமுக தலைவர் பெயர் சூட்டியதாக அரசு செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம் என்றும், தமிழ்நாட்டின் புகழ் பெற்ற தலைவரை (எம்ஜிஆர்), மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரை, இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவரை சிறுமைபடுத்துவது என்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இனி வருங்காலங்களில் இதுபோன்று வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியை கைவிடுவது நல்லது என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு படைத்தவர்களுக்கு மத்தியில், வரலாறாகவே வாழ்ந்தவர்களுக்கு மத்தியில், வரலாற்றில் இடம்பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், வரலாற்றை திரித்து எழுதும் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது திமுக என்றால் அது மிகையாகாது.

‘பாரத ரத்னா’ மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் 16-01-2022 நாளிட்ட செய்தி வெளியீட்டில், மறைந்த திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய திரைப்படங்களின் வாயிலாக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனியிடம் கிடைத்தது என்றும், மறைந்த திமுக தலைவரால் வழங்கப்பட்ட புரட்சி நடிகர் என்ற பட்டமே பின்னர் புரட்சித் தலைவர் என்று நிலை பெற்றது என்றும், சென்னை கிண்டியிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்று மறைந்த திமுக தலைவர் பெயர் சூட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பான,வரலாற்றை திரித்து எழுதும் செயலாகும்

இயற்கையாகவே அனைவரையும் வசீகரிக்கும் திறன் படைத்தவர் புரட்சித் தலைவர் அவர்கள். அவர் திரையுலகில் கொடிகட்டி பறந்ததற்குக் காரணம் அவருக்குள்ள தனித்தன்மை. “நீ முகம் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்டவர் புரட்சித் தலைவர் அவர்கள். இப்படிப்பட்ட தனித்தன்மை வாய்ந்த புரட்சித் தலைவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதிய படங்களில் வாயிலாக தனியிடம் கிடைத்தது என்பது நகைப்புக்குரியதாக உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தான் மறைந்த தி.மு.க. தலைவரை முதலமைச்சராக ஆக்கியவர்.

1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவை வீழ்த்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி, தொடர்ந்து மூன்று முறை யாராலும் வெல்ல முடியாத ஒரு புரட்சியை செய்ததால் அவருக்கு மக்களே புரட்சித் தலைவர் என்று பெயர் சூட்டினார்கள் என்பதுதான் உண்மையே தவிர, புரட்சி நடிகர், புரட்சித் தலைவராக என்பதெல்லாம் கட்டுக்கதை மாறியது.

புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரரான எம்ஜிஆர் அவர்களுக்கு மெரினாவிலேயே நினைவிடம் அமைத்த நிலையில், இந்தியத் திருநாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதினை மத்திய அரசே அவருக்கு வழங்கி கௌரவித்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்திலேயே அவருக்கு சிலை அமைத்த நிலையில், திமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது, சிலை திறக்கப்பட்டது என்று கூறுவதெல்லாம் ஒரு விளம்பரத்திற்காக என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடைசியாக, மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்று மறைந்த திமுக தலைவர் பெயர் சூட்டியதாக அரசு செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்குச் சமம். முதன் முதலில் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவு சட்டப் பேரவை சட்டமுன்வடிவு எண். 15/1987 (The Tamil Nadu Medical University Bill, 1987 – L.A. Bill No. 15 of 1987) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 04-05-1987 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு 08-05-1987 அன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் 24-09-1987 அன்று ஒப்புதல் வழங்கியபிறகு 1987 ஆம் ஆண்டைய தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகச் சட்டம் (37/1987) (The Tamil Nadu Medical University Act, 1987 37-1987) என்பது சட்டமாக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்தத் தருணத்தில் திமுக ஆட்சியில் இல்லை. அனைத்திந்திய அண்ணா திரரவிட முன்னேற்றக் கழகம்தான் ஆட்சியில் இருந்தது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருந்தபோதே மருத்துவத்திற்கு என்று தனிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுவிட்டது.

மேற்படி சட்டத்திற்கு 1987 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதாவது, தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம் என்பதை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்று மாற்றும் வகையில் தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு, 1987, சட்டப் பேரவை சட்டமுன்வடிவு எண். 41/1987 (The Tamil Nadu Medical University (Amendment) Bill, 1987 – L.A. Bill No. 41 of 1987) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 11-11-1987 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, 13-11-1987 அன்று நிறைவேற்றப்பட்டது.

இதற்கு மேதகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் 11-12-1987 அன்று பெறப்பட்ட பிறகு அன்றே அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்குப் பெயர் 1987 ஆம் ஆண்டைய தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டம் (50/1987) (The Tamil Nadu Medical University (Amendment) Act, 1987 – 50 of 1987) என்பதாகும். இந்தத் திருத்தச் சட்டத்தின்படி, மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பெயர் ‘டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு’ என்று மாற்றப்பட்டுவிட்டது.

எனவே, மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேயே, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே சூட்டப்பட்டு, சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு விட்டது. இதிலிருந்து மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் என்று மறைந்த திமுக தலைவர் பெயர் சூட்டினார் என்ற வாதம் வடிகட்டின பொய், அண்டப்புளுகு ஆகாசப்புளுகு என்பது தெளிவாகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு (திருத்தச்) சட்டமுன்வடிவு 1991, சட்டப் பேரவை சட்டமுன்வடிவு எண். 12/1991 (The Dr. M.G.R. Medical University, Tamil Nadu (Amendment) Bill, 1991 – LA. Bill No. 12 of 1991) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 22-01-1991 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, 24-01-1991 அன்று நிறைவேற்றப்பட்டது. 08-02-1991 அன்று மேதகு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட இந்தச் சட்டம் அன்றே அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்தத் திருத்தச் சட்டத்தின் பெயர் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, சட்டம், 1991 (9/1991) என்பதாகும். இந்த திருத்தச் சட்டத்தின்படி, ‘டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்,தமிழ்நாடு’,என்பது ‘தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்,மெட்ராஸ்’ என்று மாற்றப்பட்டது. அதாவது ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் பெயருக்கு முன்னால் சேர்க்கப்பட்டது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, சட்டமன்றத்தில் நடைபெற்றதை, மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டடதை, மேதகு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதை எல்லாம் மூடிமறைத்து, ஓர் அரசு செய்தி வெளியீட்டின் மூலம் மாற்ற நினைப்பது, திரித்து எழுதுவது என்பதும்,தேவையில்லாதவற்றை அரசு செய்தி வெளியீட்டில் சேர்த்து தமிழ்நாட்டின் புகழ் பெற்ற தலைவரை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரை, இன்றளவிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள தலைவரை சிறுமைபடுத்துவது என்பதும் கடும் கண்டனத்திற்குரியது. இனி வருங்காலங்களில் இதுபோன்று வரலாற்றை திரித்து எழுதும் முயற்சியை கைவிடுவது நல்லது என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

4 COMMENTS

  1. I lobbied hard for, and received a PET Scan to determine if there indeed was any cancer elsewhere in my body doxycycline for acne However, TRPS 1 was also found to be expressed in a high proportion of ER ductal epithelial breast cancers BCs, indicating that it may act as a ductal epithelial cell specific transcription factor regulating cell fate at some point in the epithelial cell differentiation pathway

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here