சீனாவில் கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாடு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

சீனாவில் தான் கரோனா நோயாளி முதன் முதலில் கண்டறியப்பட்டாலும் அங்கிருந்துதான் உருவானதா என்ற ஆராய்ச்சிகள் இரண்டாண்டுகளுக்கும் மேல் நீண்டு கொண்டிருக்கின்றன. ஆனால் கரோனா இல்லாத தேசம் என்ற இலக்கை முன் வைத்து சீனா கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஒரே ஒரே நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் குவாரன்டைன் முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது.

சீனாவில் கடந்த சில நாட்களக மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒமைக்கரான் பரவல் காரணமாக தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆங்காங்கே தீவிர லாக்டவுன்களையும் சீனா அமல்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் சீனாவில் கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாடு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

குறிப்பாக ஜிலின் மாகாணம் கோவிட்-19 ஒமைக்ரான் மாறுபாட்டின் காரணமாக வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தற்போதைய தொற்று எண்ணிக்கையில் 30% க்கும் அதிகமாக ஜிலினில் பதிவாகியுள்ளது.

1,87,400 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட ஜிலின், அதன் 2.41 கோடி பேர் வசிக்கின்றனர். மாகாணத்திற்குள் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக 1.7 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவின் தொழில்நுட்ப நகரமான ஷென்செனில் முழுமையான லாக் டவுன் போடப்பட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயும் சீல் வைக்கப்பட்டு பல குடியிருப்பு பகுதிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன.