பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் படித்து, அரியருடன் 20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக, அண்ணா பல்கலைக்கழகம் சிறப்புத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டது. அதன்படி, கடந்த 2019-ல் சிறப்புத் தேர்வு வழக்கமான பருவத் தேர்வோடு நடத்தப்பட்டது. 2020 ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெறவிருந்த மற்றொரு தேர்வு கரோனாவால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், 2022 ஏப்ரல் – மே மாதங்களிலும், 2022 நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும் சிறப்புத் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
”அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவின் முடிவின்படி, பொறியியல் படிப்பில் நீண்ட ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பாக இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்புத் தேர்வை எழுத அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விவரங்களை அறிந்து, விண்ணப்பிக்கலாம்.
சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வு எழுதவும், வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ஒவ்வொரு தாளுக்கும் கூடுதலாக ரூ.5,000 செலுத்த வேண்டும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் இன்று (செப்.24) முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் முறை, தேதி, தேர்வு மையங்கள் ஆகிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் www.coe1annauniv.edu என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி அக்டோபர் 4 ஆகும்”.
இவ்வாறு தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.