நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் கைவிடப்பட்டது வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட்டுள்ள அறிக்கை:
”நாகப்பட்டினம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று பாமக வலியுறுத்தி வந்த நிலையில், பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை அரசு கைவிட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
நாகப்பட்டினம் பகுதியில் ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திகரிப்புத் திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொழில் முதலீட்டு அமைப்பு மேற்கொண்டது.
பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரூ.50 லட்சம் செலவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைத் தமிழக அரசின் கீழ் செயல்படும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் (MSME Trade and Investment Promotion Bureau – MTIPB) கடந்த அக்டோபர் மாத இறுதியில் கோரியிருந்தது. காவிரிப் பாசன மாவட்டங்களை ஒருங்கிணைத்துப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு முற்றிலும் எதிரான வகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் இருப்பதால், அத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி முதன்முதலில் நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளும், உழவர் அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருந்தன. எதிர்ப்புக் குரல்களை மதித்து பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் முடிவை அரசு கைவிட்டிருப்பது நல்ல ஜனநாயக நடைமுறையாகும்.
முப்போகம் விளையும் காவிரிப் பாசன மாவட்டங்கள் கடந்த சில பத்தாண்டுகளாகவே ஹைட்ரோகார்பன், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கின்றன. காவிரிப் படுகையில் கிடைக்கும் எரிவளங்களை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும்; அவ்வளங்களை அங்கேயே சுத்திகரித்து வணிகமாக்கி விடவேண்டும் என்பதுதான் அந்த நிறுவனங்களின் திட்டம். ஆனால், பாமக போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் உழவர்கள் அமைப்புகளின் போராட்டங்களால்தான் கடந்த 15 ஆண்டுகளாக அத்தகைய திட்டங்கள் செயல்வடிவம் பெறுவது தடுக்கப்பட்டிருக்கிறது.
பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களின் தீய திட்டங்கள் நிறைவேறினால் காவிரிப் பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து இருப்பதால்தான், அதைத் தடுப்பதற்காக பாமக சுமார் 5 ஆண்டுகள் போராடி காவிரிப் பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது. கடலூர், நாகை மாவட்டத்தில் 45 கிராமங்களில் 57,345 பரப்பளவில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை ரூ.92,160 கோடியில் அமைக்க 2017ஆம் ஆண்டில் அப்போதைய அரசு தீர்மானித்தது.
அதை எதிர்த்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக மக்களைத் திரட்டி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்ததால் அத்திட்டமும் பின்னாளில் கைவிடப்பட்டது. இப்போது நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை எந்தவிதப் போராட்டத்திற்கு இடம் கொடுக்காமல் அரசு கைவிட்டிருக்கிறது.
பெட்ரோ கெமிக்கல் மற்றும் ஹைட்ரோகார்பன் நிறுவனங்களால் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து முற்றிலும் விலகிவிட்டதாக நான் கருதவில்லை. பின்னாளில் ஏதேனும் புதிய பெயரில் அந்த நிறுவனங்கள் காவிரிப் படுகைக்குள் நுழையக்கூடும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட தொழில்கள் பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லை என்பதைப் பயன்படுத்தி, அந்த நிறுவனங்கள் பின்னாளில் தங்களின் திட்டத்திற்கு ஒப்புதல் பெறக்கூடும்.
இதைத் தடுக்கும் வகையில், காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் பெட்ரோ கெமிக்கல்ஸ் உள்ளிட்ட விவசாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் அனைத்துத் தொழில்களையும் சேர்க்க வேண்டும். அதற்காக அந்தச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.