கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு நுரையீரல் மீண்டும் செயல்பட எக்மோ தெரபி பயன்படுகிறது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
‘எலக்ஸ்ட்ராகார்போரல் மெம்பரேன் ஆக்ஸிஜனேஷன்’ (எக்மோ) எனப்படும் சிகிச்சை அளிப்பதில் சென்னை, அப்போலோ மருத்துவமனை 2010-ம் ஆண்டுமுதல் முன்னோடியாக திகழ்கிறது. இந்த சிகிச்சை நோயாளியின் ரத்தத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்து பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது நோயாளி மீண்டு வருவதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது.
வழக்கமான வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்க முடியாத நோயாளிகளுக்கு எக்மோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அப்போலோவில் இதுவரை 270 பேருக்கு எக்மோ மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கரோனா 2-வது அலையின்போது ஏராளமான நோயாளிகளின் நுரையீரலை மீண்டும் வெற்றிகரமாக செயல்பட வைத்து அப்போலோ மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்போலோ இதய அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் பால் ரமேஷ், டாக்டர் கே.மதன்குமார் ஆகியோர் கூறும்போது, “எக்மோ மூலம் உயிர் பிழைப்பு விகிதம் 73.9 சதவீதமாக உள்ளது” என்றனர்.
அப்போலோ குழும நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி கூறும்போது, “எக்மோ பிரிவை நிறுவ மருத்துவம், நர்சிங், பெர்ஃப்யூஷன் தொழில்நுட்பம், நிர்வாக மேலாண்மை ஒன்றாக இணைய வேண்டும். இது அப்போலோவில் கைகூடியது திருப்தி அளிப்பதாக உள்ளது” என்றார்.