கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் திருக்கோவில் அமைந்துள்ளது.
தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை
தரிசனம் செய்வதற்கு, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின்போது தடை விதிக்கப்பட்டது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகும், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியது. இருப்பினும் கனகசபை மீது ஏறி தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கவில்லை என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை பிறப்பித்துள்ள உத்தரவின்படி, சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மேடையின் மீது நின்று தேவாரம், திருவாசகம் பாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலபூஜை முடிந்த பிறகும் முதல் 30
நிமிடத்திற்கு தேவார திருவாசக திருமுறைகளை ஓதி வழிபடலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேவாரம், திருவாசகம் பாட கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவாரம், திருவாசகம் பாடுவது பிற பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையிலும், திருக்கோவிலின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.