வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை, புதுச்சேரி இடையே இன்று அதிகாலை கரையைக் கடந்தது.

இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த லெட் அலர்ட் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வங்கக் கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதேபோல், அரபிக் கடலிலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் நிலை உருவாகியிருந்தது. இதனால், வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறாமல் இருந்தது.

திடீரென அரபிக் கடல் காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழக்கவே, வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நேற்று முன் தினம் இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இதனால் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. பரவலாக கனமழை பெய்துவந்தது. காற்று முறிவு என்றொரு இடையூறு ஏற்பட்டதால், மிக அதிகனமழை பெய்யாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கி கடந்து முடிந்தது. அந்த வேளையில் புதுச்சேரியில் கனமழை பெய்தது. அங்கு 17 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியதாவது:

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்னைக்கும் புதுவைக்கும் இடையில் கரையை கடந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த ‘லெட் அலர்ட்’ அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுகிறது.

தற்போது அது வட தமிழகத்தின் பகுதியின் மேல் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் திருப்பத்தூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.