விவசாயிகளின் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, இன்று (நவ.19) காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகள் சத்தியாகிரகம் ஆணவக்காரர்களை தலைகுனியச் செய்துள்ளது. அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிக்காக விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் ” என இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும். 2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல் 3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது ஆகிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வந்தனர்.

அவர்களின் போராட்டம் ஓராண்டை நெருங்கவுள்ள நிலையில், பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.