நம் வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள் என ட்வீட் செய்துள்ளார் உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க். இது குறித்து இதற்கு முன்புகூட அவர் பலமுறை பேசியுள்ளார்.

பூமியை கடந்து பிற கோள்களில் ஆராய்ச்சி பணிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான நாடுகளுக்கு ஒரு கண் உள்ளது. குறிப்பாக அங்கு மனிதர்கள் உயிர் வாழக்கூடிய சாத்தியம் உள்ளதா என்பது குறித்த ஆராய்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செவ்வாயில் இப்போது நாசாவின் பிரசர்வன்ஸ் ரோவர் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த கிரகத்தின் படங்களை நாசாவுக்கு அனுப்பியும் வருகிறது அந்த ரோவர். அதனை அவ்வப்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பகிர்ந்தும் வருகிறது நாசா.

இதே கிரகத்தில் இந்தியா, சீனா போன்ற உலக நாடுகளும் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மறுபக்கம் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இது எலான் மஸ்கின் நிறுவனம். அந்தத் திட்டம் இப்போது உருவாக்க நிலையில் (டெவலப்பிங் ஸ்டேஜ்) தான் உள்ளது. இருந்தாலும் வரும் 2029 வாக்கில் மனிதர்களை அங்கு தங்களின் விண்கலத்தின் மூலம் குடியேற்ற முடியும் என நம்பிக்கையாக பேசி இருந்தார் மஸ்க்

 

 

 

அதனை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க அரசு செவ்வாய் கிரகத்திற்கு செல்ல ஸ்பேஸ் எக்ஸ் வடிவமைத்துள்ள பிரமாண்ட விண்கலத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த ரிவ்யூவை மேற்கொண்டு முடித்துள்ளது. இந்த நிலையில் மஸ்க் செவ்வாய் கிரக பயணம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

நம்முடைய வாழ்நாளில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 1969-இல் சந்திரனில் மனிதனின் முதல் காலடி தடத்தையும் மேற்கோள் காட்டியுள்ளார் அவர். இருந்தாலும் விண்வெளி சுற்றுலா சூழலுக்கு பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்து வருகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

 

— Elon Musk (@elonmusk) July 6, 2022