2013 முதல் இந்திய அணி உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் செலுத்தி வரும் ஆதிக்கம் வேறு எந்த அணிகளும் அவர்களின் உள்நாடுகளில் செலுத்தாத ஆதிக்கம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2013 முதல் இந்திய அணி இந்தியாவில் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெறும் 2ல் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது.
அதே போல் 2013 முதல் 15 டெஸ்ட் தொடர்களை உள்நாட்டில் ஆடிய இந்திய அணி அனைத்திலும் வென்று சாதனை புரிந்துள்ளது. இது வேறு எந்த அணியுமே தங்கள் உள்நாட்டில் செய்யாத ஒரு சாதனையாக இருந்து வருகிறது. கடைசியாக அலிஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றது.
2012க்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2017 தொடரில் இந்திய அணி ஒரு டெஸ்ட்டிலும், ஜோ ரூட் தலைமையில் சென்னையில் ஒரு டெஸ்ட்டிலும் மட்டுமே இந்திய அணி தோற்றுள்ளது.
ஆஸ்திரேலியா அணி 1994 முதல் 2000ம் வரையில் 10 டெஸ்ட் தொடர்களை தங்கள் சொந்த மண்ணில் வென்றுள்ளது. இதே ஆஸ்திரேலியா 2004-08ம் ஆண்டுகளுக்கு இடையேயும் சொந்த மண்ணில் 10 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்றது. வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் 1976-86 இடையே தங்கள் சொந்த மண்ணில் 8 டெஸ்ட் தொடர்களையும். சமீபமாக நியூஸிலாந்து 2017-2020 வரையில் 8 டெஸ்ட் தொடர்களையும் வரிசையாக வென்றுள்ளது.
2013 முதல் இந்தியாவில் ஆடிய 15 டெஸ்ட் தொடர்களில் 13 டெஸ்ட் தொடர்களில் கிளீன் ஸ்வீப் என்று முழு டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றியுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவை தோனி கேப்டன்சியில் 4-0 என்று முற்றொழிப்பு செய்ததும், தென் ஆப்பிரிக்காவை இருமுறை 3-0 என்று வீழ்த்தியதும் அடங்கும்.
இந்திய அணி இப்படி டெஸ்ட் தொடர்களை வெல்வதொடு மட்டுமல்லாமல் எதிரணியினரை இந்தக் காலகட்டங்களில் உள்நாட்டில் கூப்பிட்டு நார் நாராக கிழித்தது என்பதே உண்மை. இந்த புள்ளி விவரங்கள் கூறும் உண்மை என்னவெனில் இந்திய மண்ணில் இந்திய அணியை வெல்வது என்பது நடக்காத காரியம் என்பதுடன் எதிரணியினர் பெரிய அளவில் தோற்றுப் போவது என்பதும் நடந்துள்ளது.
இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் தற்போது வந்திறங்கி உள்ள ஆஸ்திரேலிய அணியினருக்கும் கேப்டன் கம்மின்ஸ் கண் முன்பு நிச்சயம் போகும்.
ஆனால் ஒரே வித்தியாசம் வீரர்களின் ஃபார்ம் என்ற ஒரு பெரிய காரணிதான் இப்போது கவலைக்குரியதாக உள்ளது. குறிப்பாக விராட் கோலியின் ஃபார்ம். ரோகித் சர்மாவின் நம்பகமற்ற டெஸ்ட் பேட்டிங், ராகுலின் பேட்டிங் சொதப்பல்கள் என்று வரிசையாக அடுக்கலாம். இன்னொன்று இப்போது வந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பாக பாகிஸ்தானில் இதே போன்ற பிட்ச்களில் தொடரை வென்றுள்ளனர் என்பதும் இந்த டெஸ்ட் தொடரை சுவாரஸ்யம் சேர்த்துள்ளது.