தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் இந்தியா வளரும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை, வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து நடத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல் எனும் கருப்பொருளில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது: “தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் இந்தியா வளரும். இந்த விஷயத்தில் சில முக்கியமான கேள்விகள் இருக்கின்றன.
முக்கியத்துவம் வாய்ந்த நமது தகவல்கள் எங்கே இருக்கின்றன? அவற்றை யார் சேகரிக்கிறார்கள்? பராமரிக்கிறார்கள்? அந்த தகவல்களைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள்? இதுபோன்ற முக்கியமான கேள்விகள் விஷயத்தில் தற்போதுதான் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாகத்தான் நாம் விழிப்படைந்திருக்கிறோம்.
இன்றைய புவி அரசியலில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த காலங்களிலும்கூட இப்படித்தானே இருந்தது என சிலர் வாதம் செய்யலாம். அணு ஆயுதம், இணையம், விண்வெளி உள்பட பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கடந்த காலங்களில் ஏற்பட்டபோதும் இதுபோன்று பேசப்பட்டிருக்கலாம். ஆனால், அப்போது இருந்ததைவிட தற்போது தொழில்நுட்பம் திடீரென மாற்றம் கண்டுள்ளது. இது கொள்கை மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
தற்போதைய போட்டி அரசியல் என்பது மிகவும் கூர்மை அடைந்திருக்கிறது. இதனை தொழில்நுட்பம்தான் இயக்கி வருகிறது. தொழில்நுட்ப விவாதங்கள் இதனை பிரதிபலிப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்தியாவில் அரசியல், தொழில்நுட்பத்துடன் பிண்ணிப் பிணைக்கப்பட்டுள்ளது. இதுதான் புதிய எரிபொருள். தொழில்நுட்பம் நடுநிலையானது. பொருளாதாரமோ அல்லது பிற விஷயங்களோகூட இந்த அளவுக்கு நடுநிலையானவை அல்ல. தொழில்நுட்பத்தின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க, அதன் அரசியல் பிணைப்பு பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றிணைகிறது” என்று அவர் பேசினார்.