கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து தொடரில் பிரேசில் நட்சத்திரம் நெய்மர் காயத்தினால் அன்று செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறினார். இந்த உலகக் கோப்பையில் இனி நெய்மர் ஆட்டத்தைப் பார்க்க முடியாது என்று பிரேசில் மற்றும் உலகக் கால்பந்து ரசிகர்களும் மனம் உடைந்தனர். ஆனால், இப்போது பிரேசில் பயிற்சியாளர் டீட்டே, நெய்மர் இந்த உலகக் கோப்பையில் ஆடுவார் என்று தெரிவித்து நம்பிக்கையூட்டியுள்ளார்.

பிரேசிலின் இன்னொரு நட்சத்திர வீரர் மார்க்கின்யோஸ் இது தொடர்பாகக் கூறும்போது, 24 மணிநேர உடற்கூற்றியல் சிகிச்சையை நெய்மர் மேற்கொண்டு வருவதாகவும் முழங்கால் காயத்திலிருந்து அவர் மீண்டு விடுவார் என்றும் நம்பிக்கை கூறியிருக்கிறார். இன்று சுவிட்சர்லாந்துடன் நடைபெறும் போட்டியில் ஆடுவாரா என்பது சந்தேகமே என்றாலும் இந்த உலகக் கோப்பையில் நெய்மர் மீண்டும் ஆடுவார் என்று ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.

டிசம்பர் 2ம் தேதியன்று கேமரூன் அணிக்கு எதிராக நடைபெறும் ஆட்டத்தில் நெய்மர் தேவைப்பட்டால் ஆடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் டேனிலோவும் காயம் காரணமாக ஆட முடியாதது பிரேசில் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரேசில் மேலாளர் டீட்டே கூறும்போது, “நெய்மரும் டேனிலோவும் இந்த உலகக் கோப்பையில் ஆடுவார்கள். நான் இதை உண்மையாக நம்புகிறேன். சிகிச்சை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இருவரையும் பயன்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.