எதிர்வரும் அக்டோபர் 15-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அஜ்மல்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்ளும் இந்தப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

“இந்திய அணியின் பந்துவீச்சு எப்போதுமே பலவீனமானதாக இருக்கும். இப்போது முகமது சிராஜ், முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். சுழற்பந்து வீச்சில் ஜடேஜா அபாரமாக பந்து வீசி வருகிறார். பும்ரா, பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த காலங்களில் சிறப்பாக பந்து வீசி உள்ளார். ஆனால், அவர் கடந்த செப்டம்பரில் கடைசியாக விளையாடி இருந்தார். அதனால்தான் சொல்கிறேன், எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக இருக்காது.

இந்திய அணியின் பேட்டிங் பலம் வாய்ந்தது. அதற்கு இணையானது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு. இந்தியாவை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்திவிட்டால் பாகிஸ்தான் வெற்றி பெறுவது நிச்சயம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.