தெலங்கானாவின் ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையத்தின் கடைசி பகுதியான 20 மெகாவாட் பிரிவின் வணிக ரீதியான உற்பத்தியை ஜூலை 1 முதல்  தொடங்கிவிட்டதாக என்டிபிசி(தேசிய அனல்மின் கழகம்) அறிவித்துள்ளது.

ராமகுண்டம் மிதக்கும் சூரியசக்தி திட்டம், என்டிபிசியால் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி திட்டமாகும். இதன்மூலம், தென்னிந்தியாவின் மிதக்கும் சூரிய சக்தியின் மொத்த வணிகச் செயல்பாடு 217 மெகாவாட்டாக உயர்ந்தது.

முன்னதாக, காயங்குளத்தில் (கேரளா) 92 மெகாவாட் மிதக்கும் சோலார் மற்றும் சிம்ஹாத்ரியில் (ஆந்திரப் பிரதேசம்) 25 மெகாவாட் மிதக்கும் சோலார் வணிகச் செயல்பாட்டில் உள்ளதாக  NTPC அறிவித்துள்ளது.

இத்திட்டம் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் உகந்த  அம்சங்களைக் கொண்டுள்ளது. M/s BHEL மூலம் EPC (பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம்) நிறுவனங்களின் ரூ.423 கோடி செலவில் கட்டப்பட்டது. நீர்த்தேக்கத்தின் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்ட்டுள்ளது.

40 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் 2.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. 11,200 சோலார் தொகுதிகளைக் கொண்டுள்ளது. மிதக்கும் தளம் ஒரு இன்வெர்ட்டர், டிரான்ஸ்பார்மர் மற்றும் ஒரு HT பிரேக்கர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. HDPE (உயர் அடர்த்தி பாலி எத்திலீன்) பொருட்களால் தயாரிக்கப்படும் மிதவைகளில் சூரிய தொகுதிகள் வைக்கப்படுகின்றன.

முழு மிதக்கும் அமைப்பும் சிறப்பு HMPE (உயர் மாடுலஸ் பாலிஎத்திலீன்) கயிறு மூலம் சமநிலைபடுத்தப்பட்டு  நங்கூரமிடப்பட்டுள்ளது. 33 கிலோ வோல்ட் நிலத்தடி கேபிள்கள் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.

 

மிதக்கும் சோலார் பேனல்கள் இருப்பதால், நீர்நிலைகளில் இருந்து ஆவியாதல் விகிதம் குறைக்கப்படுவாதாக தெரிவிக்கின்றனர். இதனால் நீர் பாதுகாப்புக்கு மேம்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 32.5 லட்சம் கன மீட்டர் நீர் ஆவியாவதை தவிர்க்கலாம். சோலார் மாட்யூல்களுக்கு அடியில் உள்ள நீர்நிலைகள் அவற்றின் சுற்றுப்புற வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. அதன் மூலம் சோலார் பேனல்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தி மேம்படுகிறது என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூரியசக்தி நிலையத்தால் ஆண்டுக்கு 1,65,000 டன் நிலக்கரி நுகர்வு தவிர்க்கப்படும்; ஆண்டுக்கு 2,10,000 டன் Co2 உமிழ்வை தவிர்க்கலாம் என்று சுற்றுசூழல் அமைப்புகள் தெரிவிக்கின்றன..