முதலீடுகள் தொடர்பாக முதல்வருக்கு பல நாடுகளில் இருந்து அழைப்புகள் வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று கூறியதாவது:
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக வர உள்ள முதலீடுகளை மிக வேகமாக செயல்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் விரைவில் ‘செமி கண்டக்டர்’ கொள்கை வெளியிடப்பட உள்ளது.
தற்போது, மாறிவரும் அரசியல், பொருளாதார சூழ்நிலையால் முதலீட்டுக்கு உகந்த இடமாக இந்தியாவும், அதில் தமிழகம் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாகவும் உள்ளது. முதலீடுகள் தொடர்பாக பல்வேறு நாடுகளில் இருந்து அழைப்புகள் வருகின்றன. அந்த முதலீடுகளை ஈர்க்க உயர்நிலைக் குழுவை முதல்வர் அமைத்துள்ளார். அந்த குழுவின் ஆலோசனையை பெற்று, எந்த நேரத்தில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டால் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்றுமுடிவெடுக்கப்படும்.
பல்வேறு நாடுகளில் இருந்தும் முதல்வருக்கு அழைப்புகள் வந்துள்ளன, சூழ்நிலை, தேவை அடிப்படையில் தமிழகத்துக்கு வரும் வாய்ப்புகளை தொழில் துறை பயன்படுத்தும்.
வெளிநாடுவாழ் தமிழர்களும் இங்கு முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இதுதவிர பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழில் நிறுவனங்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. ஒரு நிலையான தொழில் செய்வதற்கான மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் இதுவரை 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் வந்துள்ளன. இதன்மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய காலணிதொழிற்சாலையை திண்டிவனத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
எகிப்துடன் பேச்சு
தமிழர்களின் வேர்களை, குறிப்பாக வரலாறுகளை தேடி பயணிக்கும் திட்டத்துக்கான பூர்வாங்கபணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து எகிப்து உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.