இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை மைதானங்களில் காண 25 சதவீதத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியுள்ளது.

ஐபிஎல் 15-வது சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் லீக் போட்டிகளானது மகாராஷ்டிராவின் சில மைதானங்களில் மட்டும் நடைபெறவுள்ளது. மும்பை, நவி மும்பை, புனே பகுதிகளில் இதற்காக நான்கு மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசன்களில் கரோனா பரவல் காரணமாக, ஐபிஎல் போட்டிகளை மைதானங்களில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த முறையும் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில் குழப்பம் நீட்டித்து வந்தது.

இந்நிலையில், தற்போது அந்த சந்தேகத்தை தீர்த்துள்ளது பிசிசிஐ. அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை காண 25 சதவீதத்துக்கும் அதிகமான ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் செய்துள்ளது. கரோனா நெறிமுறைகளின்படி, இந்த அனுமதி வழங்கப்படுகிறது என்று பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியுள்ளது. அதிகாரபூர்வ இணையதளமான www.iplt20.com-ல் இன்று மதியம் 12 மணி முதல் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.