டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பங்கேற்பதாக கூறப்பட்டது. பின்னர், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கவனித்துக்கொள்ள அவர் மருத்துவமனையில் உள்ளதால் போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், ‘இந்த அரசு ஏழைகளுக்கு இளைஞர்களுக்காக பணியாற்றவில்லை. மாறாக பெரும் முதலாளிகளுக்காகவே இது இயங்குகிறது.போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும். போலி தேசியவாதிகளை அவர்கள் கண்டறிய வேண்டும். ஒட்டுமொத்த தேசமே போராடும் இளைஞர்கள் பின்னே நிற்கிறது. இந்த அக்னிபத் திட்டம் இளைஞர்களை கொன்று, ராணுவத்துக்கே முடிவு கட்டி விடும். இந்த அரசின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மோசமான அரசை அகற்றி, நாட்டிற்கு உண்மையாக செயல்படும் அரசை நீங்கள் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராடும் இளைஞர்கள் தொடர்ந்து போராடுங்கள். அதேவேளை, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை போன்று அமைதியான வழியில் அந்த போராட்டத்தை நடத்த வேண்டும். பாஜக அரசு பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்காக எதையும் செய்யவில்லை’ என ஆவேசமாகக் கூறினார்.

இந்நிலையில், அக்னிபத் திட்டம் குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். அந்த பதிவில், ‘போலியான வாக்குறுதி வழங்கி நாட்டின் இளைஞர்களை அக்னி பாதையில் பிரதமர் மோடி நடக்க சொல்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் 16 கோடி வேலைகளை அவர் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், பக்கோடா சுடுவதற்கான அறிவை மட்டுமே அவர் ஏற்படுத்தியுள்ளார்’ எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இளைஞர்களின் போராட்டத்திற்கு மத்தியில் வேலைக்கான அறிவிப்பானையை வெளியிட்டுள்ள பாதுகாப்பு துறை, பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் போராட்டக்கரார்களில் ஈடுபடக் கூடாது என உறுதி மொழி ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது .