ஜேஇஇ மெயின் 2021 நுழைவுத்தேர்வின் 3-வது கட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், 17 பேர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
பொறியியல் நுழைவுத்தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதமும் அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.
இதற்கிடையே இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாகக் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஜேஇஇ மெயின் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடக்க இருந்த தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜேஇஇ 3-ம் கட்ட நுழைவுத்தேர்வு ஜூலை 20 முதல் 25 வரை கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் மொத்தம் 334 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இந்நிலையில் ஜேஇஇ மெயின் 3-ம் கட்ட நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், 17 பேர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து தலா 4 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளைக் காண: jeemain.nta.nic.in