கர்நாடகாவில் முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெற கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முந்தைய பாஜக அரசால் கடந்த ஆண்டு செப்டம்பரில் மதமாற்ற தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு அப்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கான மசோதா சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது. இந்நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ், அந்த சட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற விவகாரத் துறை அமைச்சர் பாட்டீல், “மதமாற்ற தடைச் சட்டம் குறித்து அமைச்சரவை விவாதித்தது. அதில், மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்பப் பெறுவது என முடிவெடுக்கப்பட்டது. அடுத்த மாதம் 3-ம் தேதி கூட உள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.

பாடப் புத்தகத்தில் மாற்றம்: கர்நாடக மாநில பாடத் திட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களால் சேர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்கேவார் குறித்த பாடம் நீக்கப்படும் என்று கர்நாடக கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் ஹெட்கேவார் குறித்த பாடத்தை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும். துணைப் பாட புத்தகங்கள் திருத்தப்பட்ட மாற்றங்களுடன் வழங்கப்படும். அதேநேரத்தில், புதிய பாட புத்தகங்கள் அச்சிடப்பட மாட்டாது. திருத்தப்பட்ட பாட புத்தகங்கள் இன்னும் 10-15 நாட்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும்” என தெரிவித்தார்.