சென்னையில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2 சதவீத தனி வட்டி விதிக்கும் நடைமுறையில் ஒருமுறை மட்டும் தளர்வு அளித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சொத்து வரி உயர்வைத் தொடர்ந்து சென்னையில் குடிநீர் வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையில் புதிய சொத்து வரியை வசூலிக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி புதிய சொத்து வரி தொடர்பான நோட்டீஸ் தபால் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல் அரையாண்டுக்கான சொத்து வரி செலுத்த செப்டம்பர் 30-ம் தேதி கடைசி நாள் ஆகும். நாளைக்குள் சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு 2% தனி வட்டி விதிக்கப்படும்.

இந்நிலையில், 2% தனி வட்டி விதிப்பில் இருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளித்து சென்னை மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, சொத்து வரி சீராய்வின் படி அரையாண்டு முதல் உயர்த்தப்பட்ட சொத்து வரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்களுக்கு ஒருமுறை 2% தனி வட்டி விதிப்பில் இருந்து தளர்வு அளிக்கப்படும்.