”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டமைப்பு வரைபடம் வெளியிடப்பட இருக்கிறது. 2 மாதங்களில் கட்டுமானப்பணிகளுக்கான டெண்டர் பணிகள் தொடங்கும். 5 மாதங்களில் கட்டுமானப்பணி தொடங்கிவிடும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மதுரை அருகே கொட்டாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மருத்துவர்கள் செவிலியர்கள் தடுப்பூசி போட்டனர். மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் இன்று (நேற்று) ஒரு லட்சம் இடங்களில் 31வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. மதுரை மாவட்டத்தில் 3,413 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் முதல் தவனை தடுப்பூசி 94.68 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் தவனை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டது. மதுரையைப் பொறுத்தவரையில் 18 வயதை தாண்டிய முதல் தவணை ஊசி 86.3 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவனை தடுப்பூசி 70.6 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியவர்கள் எண்ணிக்கை 40 சதவீதம் அளவிற்கு வந்துள்ளது.
மதுரையில் 65,653 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள் கையிருப்புள்ளது. ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து தடுப்பூசி போடும்பணி நடக்கிறது. தமிழத்தில் 76 லட்சத்து 89 ஆயிரத்து 40 பேருக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளை போல் மாநகராட்சிப் பகுதிகளில் புதிய மருத்துவமனை கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.
மிக விரைவில் மாநகரப்பகுதியில் கட்டப்படும் அந்த மருத்துவமனைகள் திறக்கப்படும். புதிதாக மாநிலத்தில் கட்டப்பட உள்ள 25 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரிக்கான பணிகள் கடந்த 2 ஆண்டாக எதுவும் நடக்காமல் இருந்தது. தமிழக முதல்வர் தொடர்ச்சியாக மத்திய அரசிடம் கேட்டு பெற்றதின் விளைவாக மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான 50 மாணவர்கள் தற்போது ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக சேர்க்கப்பட்டு படிக்கின்றனர்.
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டமைப்பு வரைபடம் வெளியிடப்பட இருக்கிறது. 2 மாதங்களில் கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் பணிகள் தொடங்கும். 5, 6 மாதங்களில் கட்டுமானப்பணி தொடங்கிவிடும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விரைவில் மருத்துவத்துறையில் 4,308 பேர் பணி நியமனம்: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மேலும் கூறுகையில், ”தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது 2,500 பேருக்கு இருந்தாலும் உயிரிழப்பு இல்லை. ஒரு வாரத்திற்கு முன் ஒருவர் சென்னையில் உயிரிழந்தார். அவர் இணை நோயால் உயிரிழந்தார். தஞ்சாவூரில் ஒருவர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நோய் தொற்று ஏற்பட்டு இறந்தார். கரோனா பாதிப்பால் நேரடியாக யாரும் கடந்த 3, 4 மாதங்களில் உயிரிழக்கவில்லை.
அரசு மருத்துவமனைகளில் உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. எம்ஆர்பி (Medical recruitment board) தற்போது பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்துவது, சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. செப்டம்பர் இறுதிக்குள் 1,021 மருத்துவர்கள் உள்பட 4308 பணியிடங்கள் நிரப்பப்படும்,” என்றார்.