ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படம் இடம்பெற்றுள்ளது.

மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மண்டேலா’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்பு ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ‘மண்டேலா‘ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு சில படங்களை தேர்வு செய்து அனுப்புவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக வித்யா பாலன் நடித்த ‘ஷெர்னி’, விக்கி கவுஷல் நடித்த ‘சர்தார் உதம்’, மலையாளத்தில் மார்ட்டின் ப்ரகத் இயக்கிய ‘நாயாட்டு’, உள்ளிட்ட 14 படங்கள் அனுப்பட்டுள்ளன. இதில் ‘மண்டேலா’ படமும் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் ஷாஜி என். கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு இப்படங்களை தேர்வு செய்து ஆஸ்கர் குழுவுக்கு அனுப்பியுள்ளது.