விஜய் மிகவும் இனிமையானவர் என்று பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ‘முகமூடி’ படத்திற்குப் பிறகு நீண்ட வருடங்களுக்குப் பின் பூஹா ஹெக்டே தமிழில் நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வந்தார் பூஜா ஹெக்டே. இதில் “விஜய்யைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் என்ன சொல்வீர்கள்?” என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பூஜா ஹெக்டே, “ஒரு வார்த்தையில் சொல்வது கடினம், ஆனாலும் முயல்கிறேன். ம்ம்ம்ம், மிக இனிமையானவர்” என்று தெரிவித்துள்ளார். அதே போல் பிரபாஸ் உடன் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ குறித்த கேள்விக்கு “அற்புதமான காதல் கதை, பிரம்மாண்டமான, மாயாஜால கதைகளைப் போன்ற காட்சிகள்” என்று தெரிவித்துள்ளார் பூஜா ஹெக்டே.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே, தமிழில் ‘பீஸ்ட்‘ படத்துக்கு பின்பு நடிப்பதற்கு பல்வேறு கதைகளையும் கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.