மருது பாண்டியர், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினம் அக்.24-ம் தேதி திருப்பத்தூரில் அரசு நிகழ்ச்சியாகவும், அக்.27-ம் தேதி காளையார்கோவிலில் சமுதாய மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் குரு பூஜையாகவும் நடத்துகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை அக்.30-ம் தேதி நடக்கிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது: குரு பூஜைக்கு மோட்டார் சைக்கிள் களில் செல்ல அனுமதியில்லை. சொந்த கார், வேன்களில் செல்லலாம். கார், வேன்களில் செல்வோர் உரிய ஆவணங்களை முன்கூட்டியே டிஎஸ்பிகளிடம் காட்டி அனுமதி பெற வேண்டும்.

வாகனங்களின் மேற் கூரையில் பயணிக்கக் கூடாது. விதிமுறைகளை கடைப்பிடிக்காதோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். பயணங்களின்போது வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டக் கூடாது. கோஷங்களை எழுப்பக் கூடாது. நடைபயணமாக சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை. அனுமதிக்கப்பட்ட வழிப் பாதைகளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கூடுதல் எஸ்பி சுந்தராஜ் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.