முழு ஊரடங்கின்போது பயணிகளிடம் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

முழு ஊரடங்கின்போது வெளியூர்களுக்கு சென்று ரயில் நிலையம், பேருந்து நிலையம் திரும்பு பயணிகள் வீடுகளுக்குச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகள் கிடைக்காமல் அவதியுற்றதாகவும், சில ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலித்ததாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே, இனிவரும் முழு ஊரடங்கு நாட்களில் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் பயணிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஊரடங்கின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் சிலர் பொறுப்பற்ற முறையில் காவலர்களிடம் நடந்துகொண்டதாகவும், சிலர் காவலர்களை தாக்கியபோதும், துறைக்குரிய பொறுப்பு, பொறுமை, மற்றும் மனிதாபிமானத்துடனும் பணியாற்றியதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கின்போது விதிமுறைகளை மீறியதாக, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி 19,962 வழக்குகளும், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி 14,956 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியது தொடர்பாக 78.34 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here