பிரிட்டனில் உள்ள அனைத்து மாணவர்களும் 18 வயது நிரம்பும் வரை கணிதத்தை ஒரு பிரிவாக படிக்க வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக, அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறும்போது, “18 வயது வரை ஏதேனும் ஒருவகையில் கணிதத்தைப் படிக்க வேண்டும் என்று நமது பிள்ளைகளை கட்டாயப்படுத்தாத சில நாடுகளில் நாமும் ஒருவராக இருக்கிறோம். தற்போது நமது நாட்டில் ​​16-19 வயதுடையவர்களில் பாதி பேர் மட்டுமே ஏதேனும் ஒருவகையில் கணிதத்தை படிக்கிறார்கள்.

எனது வாழ்க்கையில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பும் கல்வியின் மூலமே எனக்குத் தொடங்கியது. ஒவ்வொரு குழந்தைக்கும் உயர் தரமான கல்வியை வழங்குவது என்பது எனது அரசியல் பயணத்தின் முக்கியக் காரணி. சரியான திட்டமிடல் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள சிறந்த கல்வி முறைகளுக்கு நிகராக நம்மால் நிற்க முடியும்.

கணிதம் குறித்து நமது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது இன்றைய கல்வி முறையில் அவசியம் என்று நான் நினைக்கிறேன். இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் அனைத்து வேலைகளிலும் தரவுகளும் புள்ளி விவரங்களுமே முக்கியமாக உள்ளன. எனவே, எதிர்காலத்தில் நமது பிள்ளைகளின் வேலையானது முன்பை விட அதிக பகுப்பாய்வு திறன் கொண்டதாக மாறக் கூடும். எனவே, இந்த திறன் இன்றி நமது பிள்ளைகள் இருப்பது அவர்களது வீழ்ச்சிக்கு வழிவகுப்பதாக ஆகிவிடும். அதற்காக அனைவரும் கணிதத்தில் முதல் நிலை (ஏ-கிரேட்) பெற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஆனால், 18 வயது வரை பிரிட்டனில் உள்ள அனைத்து குழந்தைகளும் கணிதத்தை ஏதேனும் ஒரு பிரிவில் படிக்க நாம் பணியாற்றுவோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.