பொங்கல் பண்டியையொட்டி இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது, இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் அருகிலுள்ள முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளர்கள், 60 வயதைக் கண்ட இணை நோய் உள்ள முதியவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் இரண்டாம் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. குறிப்பாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தியும் இரண்டாம் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை குறைவில்லை. உடனடியாக இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள் வேண்டியவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொங்கல் பண்டியையொட்டி, இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை. இருப்பினும் ஆங்காங்கே நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களில் விருப்பம் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் எந்த விதமான தடையும் இல்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தது தாங்கள் தான் என அதிமுகவினர் கூறுவதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், 2011ம் ஆண்டு பிப்.12ம் தேதி அப்போதய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரிகள். இது தொடர்பான அரசாணை எங்களிடம் உள்ளது. அத்திட்டங்கள் வருவதற்கு தடையாக இருந்ததே அதிமுகதான், தற்போது அத்திட்டத்திற்கு தாங்கள் தான் கொண்டு வந்தோம் என மார் தட்டிக் கொள்வதில் என்ன நியாயம் ?”

இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.