சென்னையில் தண்ணீருக்கு அடியில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்க தமிழ்நாடு மாநில கடலோர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது

சென்னை மாநகரில் ஏற்கெனவே 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,200 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி முடிவடைந்ததும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் அடையாறு ஆற்றில் தண்ணீருக்கு கீழ் மெட்ரோ அமைய உள்ளது. மேலும், பங்கிங்காம் கால்வாயிலும் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைய உள்ளது. இதன்படி, திருமயிலையில் பங்கிங்காம் கால்வாயில் 58.33 மீ, அடையாற்றில் 666.03 மீ, இந்திரா நகரில் பங்கிங்காம் கால்வாயில் 1219.86 மீ என்று மொத்தம் 1219.86 மீட்டர் நீள பாதை நீர் நிலைகளில் செல்கிறது.

எனவே, இதற்கு அனுமதி அளிக்கக் கோரி மெட்ரோ ரயில் சார்பில் மாநில கடலோர மேலாண்மை ஆணையத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதை பரிசீலனை செய்த ஆணையம், இதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதன்பிறகு மத்திய கடலோர ஒங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்றபின் இந்தப் பணிகள் தொடங்கும்.