வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க, சென்னையின் 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணை:
சென்னை பெருநகர மாநகராட்சியில், மாநகராட்சி ஆணையருடன் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் இணைந்து, பொதுவான முன்னேற்பாடுகள், பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து அவற்றில் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்தல்,மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அதிகாரிகளைப் பொறுத்தவரை, முதல் மண்டலத்துக்கு தமிழ்நாடு பைபர் நெட் கழகத்தின் மேலாண் இயக்குநர் ஏ.கே.கமல்கிஷோர், மண்டலம் 2-க்கு தமிழ்நாடு சாலை திட்டம்-11 இயக்குநர் பி.கணேசன், மண்டலம் 3-க்கு சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மண்டலம் 4-க்கு நிலஅளவைத் துறை இயக்குநர் டி.ஜி.வினய், மண்டலம் 5-க்கு பொதுப்பணித் துறை இணை செயலர் மகேஷ்வரி ரவிக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலம் 6-க்கு வணிகவரி இணை ஆணையர் நர்நவாரே மணீஷ் சங்கர்ராவ், மண்டலம் 7-க்கு சிறுபான்மையினர் நல இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், மண்டலம் 8-க்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலர் எஸ்.பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மண்டலம் 9-க்கு தமிழ்நாடு உப்பு கழக மேலாண் இயக்குநர் கே.ராஜாமணி, மண்டலம் 10-க்கு கால்நடைத் துறை இணை செயலர் எம்.விஜயலட்சுமி, மண்டலம் 11-க்கு வணிகவரி இணை ஆணையர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலம் 12-க்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், மண்டலம் 13-க்கு அறிவியல் நகர துணைத்தலைவர் எஸ்.மலர்விழி, மண்டலம் 14-க்கு தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு கழக மேலாண் இயக்குநர் ஏ.சிவஞானம், மண்டலம் 15-க்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கே.வீரராகவராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.