கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனுடன் இணையவழியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கே.மீனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசியது:
சிறிய கிராமத்தில் பிறந்த நான் 5 வயதில் டென்னிஸ் பந்தை வைத்து எதார்த்தமாக விளையாட தொடங்கி 20 வயதில் முழுநேர கிரிக்கெட் விளையாடி, இன்று சிறந்த பந்து வீச்சாளராக உருவாகியிருக்கிறேன். இதற்கு சரியான காரணம் வாய்ப்பு கிடைத்த போது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டது தான்.
ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை உள்ளது. அதை கண்டறிந்து ஊக்குவித்தால், அவர்களை அதில் வெற்றியாளராக மாற்றலாம். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டாலும், மனம் தளராமல் தன்னம்பிக்கை, விடா முயற்சி, ஒழுக்கம், கடின உழைப்பு, அனைவரையும் மதிக்கும் பண்பு ஆகியவற்றை கொண்டிருந்தால் நாம் லட்சியத்தை அடையலாம்.
உடலையும், உள்ளத்தையும் வலிமையாக வைத்துக் கொள்ள அனைத்து சூழல்களையும் எளிமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை பொருட்படுத்தாமல் குறிக்கோளை நோக்கி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும் என்றார்.
இந்த கலந்துரையாடலில் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, சங்கரா மெட்ரிக் பள்ளி, மதி இந்திராகாந்தி கல்லூரி, தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி, அகிலாண்டேஸ்வரி வித்யாலயா, மகாத்மா காந்தி நூற்றாண்டு வித்யாலயா, ராஜாஜி வித்யாலயா ஆகியவற்றைச் சேர்ந்த 1,600 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பள்ளியின் முதல்வர் ரேணுகா வரவேற்றார். நிறைவாக முதுநிலை முதல்வர் லட்சுமணன் நன்றி கூறினார்.