மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நடந்த நீட் தேர்வில் மும்பையைச் சேர்ந்த இரு மாணவர்களுக்குக் கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் வெவ்வேறு சீரியல் எண்களுடன் வழங்கப்பட்டன. இதையடுத்து, இந்த இரு மாணவர்களும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இரு மாணவர்களுக்கும் தனியாகத் தேர்வு நடத்திய பின்புதான் நீட் இளநிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். அதுவரை வெளியிடக் கூடாது என்று கூறித் தடை விதித்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து நீட் தேர்வு நடத்திய தேசிய டெஸ்ட்டிங் ஏஜென்ஸி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள், நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.காவே ஆகியோர் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
தேசிய டெஸ்ட்டிங் ஏஜென்சி சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடுகையில், “குழப்பம் நடந்தது உண்மைதான். அந்தத் தவறையும் தேர்வு நடத்திய அதிகாரி ஒப்புக் கொண்டார். மொத்தம் 6 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் மட்டுமே நீதிமன்றம் வந்துள்ளனர். மற்ற 4 பேரும் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்றுவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். 2 மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வின் முடிவை நிறுத்தி வைக்கக் கூடாது. அவர்கள் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள்.
அந்த இரு மாணவர்களுக்கும் என்ன மாதிரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதை தீபாவளி விடுமுறை முடிந்து பார்க்கலாம். தேசிய தேர்வு முகமையும் இரு மாணவர்களுக்கும் தீர்வு வழங்கத் தயாராக இருப்பதால், தேர்வு முடிவுகளை வெளியிடுங்கள்” என உத்தரவிட்டனர். வழக்கை வரும் நவம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் நடந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை 16.14 லட்சம் மாணவர்கள் 202 நகரங்களில் 3,682 தேர்வு மையங்களில் எழுதினர். இந்தத் தேர்வை 9,548 கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர், 5615 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு அறைக் கண்காணிப்பாளராக 2.69 லட்சம் ஆசிரியர்களும், 220 ஒருங்கிணைப்பாளர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.