டெல்லியில் 9 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபின் அவரின் பெற்றோர் படத்தை பகிர்ந்த ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராமும் முடக்கப்பட வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஃபேஸ்புக் நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்ஸோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். அதைத் தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன. விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தடை செய்ய வலியுறுத்தியுள்ளது.
சிறுமியின் தாயாரைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி அது தொடர்பான வீடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். போக்ஸோ சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் குடும்பத்தாரின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில், ஊடகங்களில் வெளியிடுவது குற்றம் என்பதால், அதை நீக்கக் கோரியுள்ளது.
இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ராகுல் காந்தி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். இதில் பெற்றோரின் முகம், அடையாளம் மறைக்கப்படாமல் தெளிவாகத் தெரிகிறது.
சிறார் பாதுகாப்புச் சட்டம், போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தடை செய்ய வேண்டும், அந்த வீடியோவை நீக்க உத்தரவிட வேண்டும். சமூக வலைத்தளத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப புகைப்படத்தை வெளியிடுவது சிறார் பாதுகாப்புச்சட்டம் பிரிவு 74ன் கீழ் குற்றமாகும்.
போக்ஸோ சட்டம் பிரிவு 23, ஐபிசி 228ஏ ஆகியவற்றின் கீழ் குற்றமாகும். ஆதலால், ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் வீடியோ நீக்கி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.