குரோம்பேட்டையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு லட்சுமிபுரம், நியூ காலனி, பொழிச்சலுார், பம்மல், குரோம்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 1,267 மாணவர்கள் படிக் கின்றனர்.
இதில், கணினி பிரிவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 200 பேர். பழமையான இப்பள்ளியில் கணினி அறிவியல், அரசியல் அறிவியல் பிரிவுகளுக்கு இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால், இப்பாடங்களை படிக்க முடியாமல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் குரோம்பேட்டை சந்தானம் கூறியதாவது: குரோம்பேட்டை அரசு பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாதது வேதனை அளிக்கிறது. சில நேரங்களில் மாணவர்களின் நலன்கருதி பணியாற்றும் ஆசிரியர்களே தனியாக பணம் கொடுத்து, கணினி பாடம் நடத்த அவ்வப்போது வெளியில் இருந்து ஆசிரியர்களை அழைத்து வருகின்றனர்.
இப்பள்ளியில் காலம் காலமாக அரசியல் அறிவியல் பிரிவு இருந்து வருகி றது. அப்பிரிவுக்கும் ஐந்து ஆண்டுகளாக ஆசிரியர் இல்லை.
மற்ற ஆசிரியர்கள், குறிப்பு கொடுத்து, மாணவர்கள் படிக்க உதவுகின்றனர். மற்றொரு புறம், 6 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்த, ஐந்து பணியிடங்கள் அறிவிக்கப்பட்டும், இதுவரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
சென்னையை ஒட்டியுள்ள, ஒரு அரசு பள்ளியில், கணினி மற்றும் அரசியல் அறிவியல் பிரிவுக்கு, ஆசிரியர்கள் இல்லாதது, கல்வி துறையின் அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இப்படி ஒரு நிலை இருந்தால், பிளஸ் 2 தேர்வில், இப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும். இதுதொடர்பாக, கல்வித் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிடப் பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.