அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் நேற்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடல்: ஜெயலலிதாவின் சாதனைகள் நம்மை எல்லா நேரங்களிலும் வழிநடத்தும் ஆற்றல் கொண்ட திசைமானி என்றால் அது மிகையல்ல. எத்தனை சோதனைகள் வந்தபோதும் அவற்றை எளிதில் முறியடித்து சிந்தனையிலும், செயல் முறைகளிலும் உலகமே வியந்து நோக்கும் வகையில் வெற்றி கண்டார். ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் உடன்பிறப்புகளின் அயரா முயற்சியையும், தளரா நெஞ்சுறுதியையும், தாய்க்கு மகனும், மகளும் ஆற்ற வேண்டிய நன்றி கடன்களையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
என்னுடைய காலத்திற்கு பிறகும் அதிமுக ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும், மக்கள் பணியாற்றும் என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார். தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவைதான். ஆனால், துவண்டுவிடாத நெஞ்சுறத்தோடு அதிமுகவை காப்பாற்றவும், தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றவும், நம்மை நம்பி ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிக்கவும், நம் அன்புத்தாயின் சபதத்தை நாமும் ஏற்போம், அதிமுகவை அரியணையில் அமரச் செய்வோம். அதிமுகவுக்கு வெற்றியை ஈட்டி உங்களது ஆன்மாவை மகிழ்விப்போம் என்று ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நமது சூளுரையாக அமையட்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.