பழைய பென்ஷன் திட்டத்தை நடை முறைப்படுத்துவது சாத்தியமில்லை என ஆரம்பத்தில் பாஜக சொன்னதையே நிதி அமைச்சரும் சட்டப்பேரவையில் கூறியுள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என பாஜக ஆரம்பம் முதலே கூறி வருகிறது. பாஜக சொன்னதைத்தான் நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் தற்போது கூறியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன பொய்களில் இதுவும் ஒன்று என்று சட்டப் பேரவையில் ஒத்துக்கொண்டுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு, ஆலப்புழா, பாலக்காடு ஆகிய பகுதிகளில் 2 ஆண்டுகளில் 66 கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த மாதம் நடந்த 2 கொலைகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. இதை தமிழக ஆளுநர், கடந்த 50 ஆண்டு உளவுத்துறை அனுபவ அறிவில் கூறியுள்ளார். இதை அரசியல் ஆக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.