விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதை கூறி வருகின்றனர், இதில் கபில் தேவ் மிகச்சரியாகக் கூறினார், அதாவது 450 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினையே கோலி உட்கார வைக்கும் போது பார்மில் இல்லாத கோலியை நீக்கினால் தவறென்னா, அவருக்காக பார்மில் இருக்கும் வீரர்களை நீக்கலாமா? என்று கடும்சொல் கூறினார்.

வெங்கடேஷ் பிரசாத் கூறிய போது, அந்தக் காலத்தில் சேவாக், கங்குலி, கம்பீர், ஹர்பஜன், ஜாகீர் கான் போன்ற ஜாம்பவான்களையே பார்மில் இல்லையென்றால் உட்கார வைத்தார்கள் கோலி மட்டும் என்ன விதிவிலக்கா என்றார். மற்றும் சிலர் பார்மில் இல்லை என்றால் அணியை விட்டு நீக்கு, அதென்ன அவருக்கு ஓய்வு அளிப்பது? என்று கேட்டுள்ளனர்.

ஆனால் இவர்கள் எல்லோரையும் விட கேப்டன் ரோஹித் சர்மா கூறுவதுதான் முக்கியம், அவர் என்ன கூறுகிறார் என்றால் இது எல்லோருக்கும் சகஜம், வெற்றியும் தோல்வியும் வீரனுக்குச் சகஜம் என்கிறார், ஆனால் சூசகமாக அவரது கடந்த கால பங்களிப்பை புறக்கணிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறாரே தவிர, அவர் பார்முக்கு வருவார், அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறவில்லை என்பதுதான் மிக முக்கியமானது.

ரோஹித் சர்மா கூறியதாவது: அனைத்து வீரர்களும் விளையாட்டில் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்கிறார்கள். இதனால் ஒரு வீரரின் திறமை என்பது பாதிக்கப்படாது. ஒரு வீரர் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடும் போது, ​​ஒன்றிரண்டு மோசமான தொடர்கள் அவரை மோசமான வீரராக மாற்றாது. அவரது கடந்த கால பங்களிப்பை நாம் புறக்கணிக்கக் கூடாது, என்றார்.