கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை தாக்கியுள்ள வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வகையை சேர்ந்தது அல்ல. டெல்டா வைரஸில் இருந்து வேற்றுருவம் அடைந்த வைரஸாக இருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரஸ் பரவவில்லை.
எனினும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகாவில் இன்று முதல் புதிதாக 10 கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள தென்னாப்பிரிக்கா, ஹாங்காங், போட்ஸ்வானா ஆகிய 3 நாடு களில் இருந்து வருவோர் கட்டாயம் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணங்களை கொண்டுவர வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தாலும் விமான நிலையத்துக்கு அருகிலேயே ஒரு வாரம் தனிமைப்படுத்தப் படுவார்கள்.
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வரும் பயணிகளும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும். இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டிருக்க வேண்டும். அதே போல இரு மாநில பயணிகளை கண்காணிக்க எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பசவராஜ் கூறினார்.