சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் இயற்கையை வணங்க வேண்டும், அதை போற்றிப்பாதுகாக்க வேண்டும் என்று 1988-ம்ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் இயற்கை வள மேம்பாட்டு மாநாட்டை நடத்தி, மரங்களை நடவும், உலகப் பருவநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவும் மண் வளத்தைப் பாதுகாக்கவும் வேண்டுமென வலியுறுத்தினார். இந்தப் பணியை ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் அன்றிலிருந்து செய்து வருகிறார்கள்.
மேலும் மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் மரம் நட்டு நீரூற்றி பாதுகாத்தல் நிகழ்ச்சி ஜூன் 25-ம் தேதி மேல்மருவத்தூரில் தொடங்கி தொடர்ந்து இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் 180-க்கும்மேற்பட்ட இடங்களில் 25 ஆயிரம்மரக்கன்றுகளை 1,755 செவ்வாடை பக்தர்கள் ஒரேநாளில் நட்டு நீரூற்றினர். நடப்பட்ட மரக்கன்றுகளை நீரூற்றி பராமரிக்க செவ்வாடை பக்தர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்காக கின்னஸ் விருது அறிவிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழை கின்னஸ் நிறுவனத்தின் நடுவர் சுவப்னில் தங்காரிகர் சித்தர்பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து விருதுக்கான சான்றிதழை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் தேவி ரமேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்