நட்சத்திரங்கள் 27. அந்த 27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டும் “திரு” என்கிற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை. இன்னொன்று திருமாலுக்குரிய திருவோணம்.

ஆவணி மாதம் சிரவண மாதம் என்று அழைக்கப்படுகின்றது. சிரவண மாதம் என்பது திருவோண நட்சத்திர மாதம். சந்திரமான முறையில் எந்த நட்சத்திரத்தில், அந்த மாதத்தில் பௌர்ணமி இருக்கிறதோ, அதை வைத்தே அந்த மாதத்தின் பெயரைச் சொல்லுவார்கள். சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் முழு நிலவு இருக்கும். சித்திரை மாதம் என்று அந்த மாதத்தின் பெயர். அதைப்போலவே ஆவணி மாதத்தில், திருவோண நட்சத்திரத்தில் முழுநிலவு விளங்கும் என்பதால், அந்த மாதத்தை சிரவண மாதம் என்று சொல்லுவார்கள். அந்த நாளை ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகின்றார்கள்.

பத்து நாட்கள் திருஓணம்

கேரள தேசத்தில் இதை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள். ஹஸ்த நட்சத்திரத்தில் ஆரம்பித்து, திருஓணம் வரை பத்து நாட்கள் இந்தப் பண்டிகையை அவர்கள் கொண்டாடுகின்றார்கள். சங்க இலக்கியத்தில் வாமன அவதாரத்தைக் கொண்டாடிய நாளாக ஓணம் குறிக்கப்படுகிறது. ஆறுவகை சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் பலவகையான உணவுகள் தயாரிக்கப்படும் திருநாளாக இந்த திருநாள் விளங்குகின்றது. அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அழகான பூ கோலம் போடுவார்கள்.

அதற்கு “அத்தப்பூ கோலம்” என்று பெயர். அழகான வெண்ணிற ஆடைகளை மக்கள் அன்றைக்கு உடுத்திக் கொள்வார்கள். வண்ணக் கோலமிட்டு, நடுவில் ஐந்து முக விளக்கை ஏற்றி வைத்து, கும்மி, கோலாட்டம் என்று விதம் விதமாக ஆடிப்பாடும் அற்புதத் திருநாள் இது. கேரள தேசத்தில் பாரம்பரியமான படகுப் போட்டியும் ஓணம் பண்டிகையை ஒட்டி நடக்கும்.

பதவி தரும் திருவோணம்

பகவான் பிறந்த இந்த திருவோண நட்சத்திரத்திற்கு பல சிறப்புகள் உண்டு. ஒவ்வொரு  கிரகத்துக்கும்  மூன்று நட்சத்திரங்கள் உண்டு. அதில் சந்திரனுக்கு உரிய நட்சத்திரங்களில் ஒன்று இந்த திருவோணம். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகச்சிறந்த மனிதாபிமானத்தோடு இருப்பார்கள். மிகுந்த தைரியசாலிகளாகவும், எதையும் திறமையோடு கையாள்பவர்களாகவும், தெய்வ பக்தி மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள்.

திருவோணத்தில் பிறந்தவர்கள் உலகத்தை ஆளக்கூடிய சிறப்பு பெறுவார்கள் என்பதை, பெரியாழ்வார் ‘‘திருவோணத்தான் உலகாளும் என்பார்களே” என்ற பாசுரத்தில் கோடிட்டுக் காட்டுகிறார். சூரியனுக்குரிய ஆவணி மாதத்தில் சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரத்தில் பகவான் அவதரித்து இந்த உலகத்தை தன்னுடைய திருவடியால் அளந்தான் என்பது திருவோண பண்டிகைக்கு உரிய விசேஷம்.

நிலம் அளந்த பெருமாள்

பொதுவாக நிலம் யாருக்கு உரியது என்பதை சங்கிலியால் அளந்து அளவிட்டு வைப்பார்கள். அப்படி அளந்து இந்த அளவுடைய மண் இவருக்கு உரியது என்று பட்டா போட்டுத் தருவார்கள். அதுமுதல் அந்த நிலத்திற்கு அவர் உரிமையாளர் ஆகிவிடுவார். மற்றவர்கள் யாராவது அந்த நிலத்தை எடுத்துக் கொண்டாலும், மறுபடியும் அளந்து, இது எனக்கு உரிய நிலம் என்று நிரூபித்து விடலாம். அதைப்போல, மகாபலி என்கின்ற மன்னன் இந்த உலகத்தை தன்னுடைய நிலமாகக் கருதி ஆண்டு வந்தான். அவன் பிரகலாதனின் பேரன் ஆவான்.

இந்திரன் அதைத் தனக்குத் தரும்படி இறை வனிடம் வேண்ட, இறைவன் ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் அவதரித்து, வாமன வடிவம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று மூன்றடி மண் கேட்டான். ‘யானே என் காலடியால் அளப்ப மூன்றடி மண் மன்னா தருக’ என்று இந்நிகழ்வை திருமங்கை ஆழ்வார் மடலில் பாடுகிறர். உண்மையில் அந்த மண்ணானது இந்திரனுக்கும் சொந்தமானதல்ல. மகாபலிக்கும் சொந்தமானதல்ல. அதற்கு சொந்தமானவன் இறைவனான மகாவிஷ்ணு.

‘வாமனன் மண் இது’
மண்ணை இருந்து துழாவி ‘வாமனன் மண் இது’ என்னும்,
விண்ணைத் தொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கை காட்டும்,
கண்ணை உள்நீர் மல்க நின்று ‘கடல்
வண்ணன்’
என்னும் அன்னே! என்

பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன் பெய் வளையீரே? என்று ஆழ்வார்,“ஐயோ இது என்ன கொடுமை!  இந்திரன் தனது மண் என்கிறான். மஹாபலி தனது மண் என்று வளைத்து ஆண்டு கொண்டிருக்கிறான். உண்மையில் இது இறைவனாகிய வாமனன் மண் அல்லவா. இதை இருவரும் உணரவில்லையே” என்று வருத்தப் படுகிறார். ஆயினும் அழுது தொழுத இந்திரனுக்காக, இறைவன் தானே சென்று கேட்டு, தனது அடியால் அளந்து கொண்ட நன்னாள் இந்நாள். உலகங்களுக்கும் தானே உரிமை உள்ளவன் என்பதை தன் காலடியால் “சர்வே” செய்து எடுத்துக் கொண்ட நாள் இந்த திருவோணநாள்.

அவன் தான் உலகத்தின் முதல் சர்வேயர் அவன் மண்ணை, மண் வேண்டி, யார்  கேட்டாலும், அவர்களுக்கு இறைவன் தருவான் என்பது தான் இந்த பண்டிகையில் உள்ள அடிப் படையான விஷயம். எனவே, மண் யோகம் தரும் நாள் இது. ‘‘மனிதா, இன்று உன் பத்திரத்தில் உள்ள நிலம் இறைவனுக்குச் சொந்தமானது. தற்காலிகமாக உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் அனுபவிக்கும் உரிமை இறையருளால் கிடைத்திருக்கிறது.

அந்த இறைவனுக்கு நன்றி செலுத்தி, அந்த மண்ணை, தர்ம நியாயப்படி ஆண்டு வா. அப்படி இல்லாவிட்டால் இன்று உனக்குள்ள மண்ணைப் பிடுங்கி, (மஹாபலி நிலத்தை இந்திரனுக்குத் தந்ததுபோல்) இறைவன் வேறு ஒருவரிடம் தந்து விடுவான்’’ என்பதை மக்களுக்கு மறைமுகமாக உணர்த்துவது ஓணம் பண்டிகை. இதை உணர்ந்து ஓணம் பண்டிகையைக்  கொண்டாட வேண்டும்.

மகாபலி சக்கரவர்த்தி கேட்ட வரம்

மூன்றடி நிலம் கேட்டு வந்தவனிடம் அந்த நிலங்களை அளந்து கொள்ளச் சொல்லிவிட்டு கடைசியில் தன்னுடைய தலையையும் பகவானுடைய
காலடியில் வைத்தான்  மகாபலி சக்கரவர்த்தி. அப்பொழுது அவன் ஒரு வரம் கேட்டான். ‘‘பகவானே! நான் இப்பொழுது பாதாள உலகுக்குச் செல்கின்றேன். இருந்தாலும் நான் தேசத்தை விட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது. எனவே, ஆண்டுதோறும் ஒரு நாள்,  நான் வந்து, இந்த மண்ணையும் மக்களையும் சந்திக்கும்படியாக வரம் அருள வேண்டும்” என்று வேண்ட, அதைப்போலவே மகாவிஷ்ணு மகாபலிக்கு வரம் தந்து அருளினார்.

மகாபலியும், ஆவணி மாதம், திருவோண நன்னாளில் வந்து, தான் ஆண்ட மண்ணையும்,  மண்ணில் உள்ள மக்களையும்  பார்த்துச்  சந்தோஷப்பட்டு, எல்லோருக்கும் நல் வாழ்த்துக்களையும், நல் வாழ்க்கையையும் கொடுப்பதாக ஐதீகம். அப்படி வருகின்ற மகாபலியை, மக்கள் வரவேற்பதற்குத் தயாராக, மலர்களால் கோலமிட்டு, மங்கல தோரணங்கள் கட்டி, அழகு படுத்துகிறார்கள். பல்வேறு வகையான பணியாரங்களைத் தயார் செய்து, படைத்து உண்டு மகிழ்கின்றனர்.

வாமன ஜெயந்தி

நம்முடைய தமிழ்நாட்டில் வாமன ஜெயந்தியாக அந்த நாள் கொண்டாடப்படுகிறது. பெருமாள் திருக்கோயில்களில், அன்று விமர்சையான திருமஞ்சனம் நடைபெறுகிறது. குறிப்பாக திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் சந்நதியின் பின்புறம் மகாபலிக்கு தனிச்சந்நதி இருக்கிறது. அந்த நாளில் அங்கு விசேஷமான திருமஞ்சனம் நடைபெறும். ஒரு சிலரே அதனைச் சேவித்திருப்பார்கள். பலருக்கு அப்படி வாமன சந்நதி இருப்பது தெரியாது. அடுத்தமுறை அங்கு செல்லும்போது வாமன மூர்த்தியை தரிசனம் செய்யுங்கள்.

சந்தோஷ வாழ்வைத் தரும் திருவோணம்

இந்தத் திருவோண மூர்த்தியை வழிபடுவதன் மூலமாகவும், வாமன ஜெயந்தியை வீட்டிலேயே இனிப்பு பலகாரங்களைப் படைத்து, பகவானை நினைத்து பாசுரம் பாடி, பூஜை செய்வதாலும், இடையூறுகள் நீங்கும். சந்திரதசை நடப்பவர்கள் அவசியம் இந்தப் பூஜையைச் செய்வது சந்தோஷ வாழ்வைத் தரும். திருவோண நன்னாளில் உலகளந்த பெருமாளை நினைத்தால் உன்னத வாழ்க்கையைப் பெறலாம். மகாபலிச் சக்கரவர்த்தி, தானம் தந்ததன் மூலமாக, தனிப்பெரும் பெருமையை அடைந்தான்.

அதனால் இந்த ஓணம் பண்டிகை தானத்தின் சிறப்பைச்  சொல்வது. ஆகையினால் உங்களால் இயன்ற பொருளை இல்லாதவர்களுக்குக் கொடுத்து மகிழ்வது, இப்பண்டிகையின் உண்மையான ஏற்றத்தை காண்பிக்கும். அதைச்  செய்பவர்களுக்கு அளவில்லாத பலனைத் தரும். காரணம், பகவான் மிக அருமையாக சொல்லு கின்றான். ‘‘நீ ஒரு மடங்கு தந்தால், ஒன்பது மடங்கு தருவேன்.’’ஆம்; நீங்கள் மற்றவர்களுக்குச் செய்கின்ற சிறுஉதவி, ஆயிரம் மடங்கு பெருகி, உங்களுக்கு வரும் என்பதை அனுபவத்தில் உணர்வீர்கள். அதற்கான பண்டிகைதான் இது.