இந்தியாவில் கல்வி தீவிரமான பேசுபொருளாகி வருகிறது. நல்லதுதான். புதிய கல்விக் கொள்கை முன்னிறுத்தும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி எந்த அளவுக்கு சாத்தியம்..?

அடிப்படைக் கட்டுமானங்கள் இல்லாத அரசுப் பள்ளிகள் ஏராளம். இப்போதுதான் கட்டிடங்கள், கழிப்பறைகள், மேசை நாற்காலிகள் இல்லாத பள்ளியே இல்லை என்று பெருமையுடன் கூறுகிற நிலையை ஏறக்குறைய தொட்டு இருக்கிறோம். இதில் புதிய தொழில்நுட்பம் எங்கிருந்து வரும்..?

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளுக்கே செலவு செய்து கொண்டு இருக்கப் போகிறோம்..? நினைவில் கொள்வோம் – நிறுவுதல் வேறு; புதுப்பித்தல் வேறு. நாம் இன்னமும் நிறுவிக் கொண்டுதான் இருக்கிறோம். எப்போது முடிக்கப் போகிறோம்..?

உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட நாட்டில், பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தருதலையே சாதனையாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். அடுத்த கட்டங்களுக்கு நகர்வது எப்போது..?

ஒரு மாநிலத்தில், பாதுகாப்பு கருதி, பழைய, சிதிலம் அடைந்த பள்ளிக் கட்டிடங்களை இடிக்கச் சொல்லி அரசு உத்தரவு இட்டது. மாவட்டந்தோறும் நூற்றுக் கணக்கான சுவர்கள், வகுப்பறைகள் இடிக்கப்பட்டன. பிறகு..? புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப் பட்டனவா..? போதிய கட்டிடங்கள் இல்லாத நிலையில், வகுப்புகள் எங்கே எப்படி நடக்கும்..? இன்றுவரை தெளிவான விவரங்கள் இல்லை.

யோசித்துப் பார்த்தோமா..? கல்விக்கான நிதி ஒதுக்கீடு, நேரடியாக மாணவர்கள், பெற்றோருக்குப் பயன் அளிக்கிற விதத்தில் இருந்தால், அதாவது, ஏதேனும் ஒரு வகையில், கட்டணக் குறைப்புக்கு வழி வகுத்தால், எத்தனை நன்றாக இருக்கும்..? கட்டமைப்பா..? கட்டணக் குறைப்பா..? சாமான்யர்களுக்கு எது அதிக பயன் தரும்..? கட்டமைப்பு வேண்டாம் என்று பொருளல்ல. கடந்த 75 ஆண்டுகளில் இதை எல்லாம் செய்து முடித்து இருந்தால்…? கல்விக்கான நிதி ஒதுக்கீடு மேலும் அர்த்தம் கொண்டதாய் இருந்திருக்கும். அல்லவா..?

பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி தொடர்பாக அரசுகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவரமாக விவாதிக்க நிறைய இருக்கிறது. இப்போதைக்கு பட்ஜெட் தொடர்பாக, மத்திய மாநில அரசுகளுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்: தம் பிள்ளைகளுக்குக் கல்வி தருவதில், பெற்றோருக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு வழிகோலும் திட்டங்கள் தீட்டி தேவையான நிதி ஒதுக்கினால், பல லட்சம் குடும்பங்களின் பொருளாதார நிலை சற்று மேம்படும்.

அடுத்து, வேலை வாய்ப்பு. புள்ளி விவரங்களுக்குள் செல்லும் முன்னால், சில உண்மைகளை நன்கு பதிய வைத்துக் கொள்வோம். ஆண்டுதோறும் பல லட்சம் பட்டதாரிகள் வெளியே வருகிறார்கள். இவர்களை விடவும் அதிக எண்ணிக்கையில் பத்து, பனிரெண்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு, வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் பல லட்சம் அதிகம். பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு இவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு கூடி இருக்கிறது. இவர்களுக்கு என்று இத்தனை ஆண்டுகளில் தனியே எந்த வேலைவாய்ப்புத் திட்டமும் வகுக்கப்படவில்லை.

தினக்கூலி அடிப்படையில் தனிநபர்களின் பிடியில் இவர்களின் எதிர்காலம் சிக்கிக் கொண்டு இருக்கிறது. வேலைக்கு உத்தரவாதம் இல்லை; பணி நேரம், குறித்த நாளில் ஊதியம், ஆரோக்கியமான பணிச்சூழல்… எதுவும் இன்றி, ஒவ்வொரும் நாளையும் சவால்களுக்கு இடையே நகர்த்திக் கொண்டு இருப்போர், நம் கண் முன்னே எல்லா ஊரிலும் இருக்கிறார்களே… இவர்களைப் பார்த்தும் நம்மால் எப்படி பொருளாதார வலிமை குறித்துப் பேச முடிகிறது!

உள்நாட்டு உற்பத்திப் பெருக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு, அயல் நாட்டு முதலீடுகள் வந்து குவிதல், மாபெரும் நிறுவனங்கள் நமது நாட்டை நோக்கி வருதல்… எல்லாம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடையாளமாக இருக்கலாம். ஆனால்…

கடந்த சில பத்தாண்டுகளில் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது, அவர்களின் வாழ்க்கை நிலை, குலைந்து கொண்டே செல்கிறது. கவனித்தோமா..?

பொருளாதார வளர்ச்சி கணக்குகள், ஆய்வுகள், ஒப்பீடுகளில் வந்தால் போதுமா..? நலிவடைந்தோரை வளர வைத்து இருக்கிறதா..? அவர்கள் வளம்பெற உதவி இருக்கிறதா..? 2023இல் இதற்கான வழிவகைகளை அரசுகள் கண்டறியட்டும்; செயல்படுத்தட்டும்.