ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பட்ஜெட் குறித்து செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்வீட்டால் மீண்டும் சர்ச்சை உருவாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் 2-3 வருடங்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வெளியான சமயத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏமாற்றம் தந்தது.
ஆனால், காலப்போக்கில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கென பிரத்யேகமான ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகி பலராலும் கொண்டாடப்படும் ‘கல்ட்’ திரைப்படமாக தற்போது பார்க்கப்படுகிறது. தற்போது, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 2-ம் பாகத்தை தனுஷை வைத்து உருவாக்கவுள்ளார் செல்வராகவன். இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் சொன்ன பட்ஜெட் வேறு, எடுக்கப்பட்ட பட்ஜெட் வேறு என்று தயாரிப்பாளர் – இயக்குநர் செல்வராகவன் இருவருக்குமே கடும் மோதல் ஏற்பட்டது. அந்தப் படத்துக்குப் பிறகு தயாரிப்பாளர் வேறு எந்தவொரு படத்தையும் எடுக்காமல் இருக்கிறார்.
இந்நிலையில், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ள ட்வீட் சமூக வலைதளத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தனது ட்விட்டர் பதிவில் செல்வராகவன் கூறியிருப்பதாவது:
“ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் ரூ.18 கோடி. ஆனால் அதை ஒரு மெகா பட்ஜெட் படமாக காட்ட நாங்கள் 32 கோடி பட்ஜெட் என்று அறிவிக்க முடிவு செய்தோம். என்னவொரு முட்டாள்த்தனம்! பட்ஜெட் தொகையை படம் வசூலித்து விட்டாலும் சுமார் என்றே கருதப்பட்டது. என்ன தடை வந்தாலும் பொய் சொல்லாமல் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.