நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான வகுப்புகள் செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைவரும் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும், வகுப்புகளில் மாணவர்களிடையே 6 அடி இடைவெளி கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வகுப்புகளை சூழலுக்கு ஏற்ப திறந்த வெளியிலும் நடத்தலாம் என்றும், அனைத்து வகுப்புகளிலும் 50% மாணவர்கள் மட்டுமே பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல நிகழ்ச்சிகளை நடத்திடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், உடல் வெப்ப பரிசோதனைக்குப் பிறகே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதுவரை 25,92,436 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,579 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.